பல ஆண்களைத் திருமணம் செய்து மோசடி; கர்நாடக பெண் மகாராஷ்டிராவில் கைதானது எப்படி?

37

கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் வசிக்கும் பாலாசாகேப் ஜனகர் – கோமளா (35) தம்பதிக்கு 16 வயது மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கோமளா தன் கணவரை விட்டு பிரிந்துவிட்டார். பிள்ளைகளுடன் பாலாசாகேப் ஜனகர் மட்டும் ஹுப்பள்ளியில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலகஷய்யா எனும் விவசாயி ஒருவர் குப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், “என் மகன் தயானந்தா (37) வுக்கு நீண்ட நாள்களாக மணமகள் தேடியும் எங்கேயும் வரன் அமையவில்லை.

இந்த நிலையில், (2023) அக்டோபர் மாதம், புரோக்கர் லஷ்மி (40) என்பவர் மூலம் கோமளா அறிமுகமானார். அவர் ஆதரவற்றவர் என்றும், கோமளாவின் மாமா சிட்தப்பா, அவருடைய மனைவி லஷ்மி சம்புலிங்கம்தான் அவரை வளர்த்து வந்தனர் என்றும் கூறினார்கள்.

நாங்களும் அந்த திருமணத்துக்கு சம்மதித்தோம். திருமண செலவுக்காகவும், நகைகள் வாங்குவதற்காகவும் கோமளா குடும்பத்தாரிடம் ரூ.2.5 லட்சம் கொடுத்தோம்.

கூடுதலாக, கோமளாவுக்கு 16 கிராம் எடையுள்ள தாலியும் வாங்கி கொடுத்தோம். திருமணமும் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து மூன்றாவது நாள் அவர்களின் குடும்ப வழக்கப்படி, மணமகள் அவரின் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறினார்கள்.

அதைப் போலவே நாங்கள் அவர்கள் ஹுப்பள்ளி செல்ல அனுமதித்தோம். ஆனால், அவர்கள் சென்ற சில மணி நேரத்தில் அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உடனே எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹுப்பள்ளி புறப்பட்டு சென்று விசாரித்தோம்.

அப்போதுதான் அவர்கள் போலியானவர்கள் என்றும், அப்படி ஒரு குடும்பம் இல்லை என்றும் அறிந்துகொண்டோம். எனவே இழந்த எங்கள் பொருளை மீட்டு கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது முதல் காவல்துறை கோமளாவையும், அவரின் குழுவையும் தேடி வந்தது.

இந்த நிலையில்தான் அந்த கும்பல் மகாராஷ்டிராவில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் மேற்கொண்ட அதே முறையை பின்பற்றி மகாராஷ்டிராவிலும் ஒரு திருமணம் நடந்திக்கொண்டது தெரியவந்தது.

உடனே காவல்துறை அந்த கும்பலை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானது முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் அவரால் ஏமாற்றப்பட்டதாக தொடர் புகார்கள் வந்திருக்கின்றன. தற்போதுவரை மூன்று பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Previous articleஉன்ன யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் காத்திருந்து பழி வாங்கிய காதலன் பரிதாபமாக பலியான சோகம்….!!!
Next articleமனைவி தொல்லை தாங்க முடியவில்லை வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த பொலிஸ்….!!!!