தினமும் 200 தோப்புக்கரணம் பள்ளியில் மயங்கி சரிந்த 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி….!!

4

90களில் பள்ளி மாணவர்களுக்கு சரியாக படிக்கவில்லை எனில் கடுமையான தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்குவார்கள். வெயிலில் முட்டிக்கால், விளையாட்டு மைதானத்தை சுற்றி வரச் செய்வது, தோப்புக்கரணம், முழங்கால், கைகளில் சராமரியான அடி என சகலமும் அரங்கேறும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களே அடிக்கும் அளவுக்கு நீ என்ன செய்தாய்? என பிள்ளைகளை தான் கண்டிப்பர். ஆனால் தற்போதைய கல்வி முறைகளில் அடித்தல் பெரும்பாலும் கிடையாது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட நூதன தண்டனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு பள்ளியில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து, பள்ளி முதல்வர் மாணவிகளை அழைத்து அனைவரையும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிலர் கால்கள் வீங்கியபடி அழுது கதறினர்.

பள்ளி முதல்வர் அப்போதும் தண்டனையை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்தனர்.

இதனைக் கண்டு மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விஷயம் அப்படியே பூதாகரமாக, ரம்பச்சோதவரம் எம்.எல்.ஏ., மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு தகவல் பறந்திருக்கிறது.

இதுகுறித்து எம்.எல்.ஏ “மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மனித தன்மையற்ற செயல். ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை அவசியமே இல்லை” எனக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleஎப்படியாச்சும் காப்பாத்துங்க வெளிநாட்டு வேலைக்கு சென்ற மனைவி மருத்துவமனையில் கதறும் கணவர்….!!
Next articleகல்லீரல் தானம் கொடுத்த இளம்பெண் திடீர் மரணம்….!!